என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சிம்மசொப்பனம்...

சிம்மசொப்பனம்


ஆங்கிலேய 
அகராதியின் 
சிம்மசொப்பனம்...
உன் அகராதிக்கு சிம்மமே 
அர்ப்பணம்;
சாதி சேற்றுக்குள் 
உன்னை அடைத்தது 
கால அரசியலின் 
சூழ்ச்சி;
சாதிக்கு அல்ல
சாதிக்க பிறந்த 
தலைவன் நீ !!
இறப்பை கூட 
பிறப்பிலே அறிவித்தவன்..
போசுக்கு பக்கதுணையாய்;
ஆலய பிரவேசத்தில் 
ஆயிரம் தூணாய்;
தேசிய படையில் 
ஆயிரம் யானையாய் - நீ
பக்கமிருந்தால் பரங்கியனும் 
பதறிப் போனான்..
பொய்கள் புடை சூழ 
புறணிகள் உன்னை ஆக்கிரமிக்க...
பொலிவிழந்தது நின் 
தேசிய பெருமை !!
சமத்துவத்தில் சரித்திரம் 
கொண்ட உன்னை
பல தரித்திரங்கள் 
வசை பாடுகின்றன
அதை வரலாறுகள் 
மறந்து போகாது
உன் பெருமையும்
மறைந்து போகாது...
இன்றே என்மீது 
சாதிச்சேரு பூசப்படும்..
கவலையுற ஒன்றுமில்லை !!!!
நீ அளித்த விவேகம் 
என்னில் உண்டு;
இணைந்த வீரமும் 
அதிகமுண்டு
பரிசீலிக்க நினைத்தால் 
தயாரான
நிலையில் நானுமுண்டு...

என் தம்பி தங்கைகளே !!



நாடொன்று
இல்லையென வருந்தாதே !!
அது நம்
தாத்தன் காலத்து நிலவு
அப்பன் காலத்து கனவு
எங்கள் காலத்து இழவு
உங்கள் காலத்தில் விடிவு....
நம்பி நடை போடு
'தம்பி' இருக்கிறான்...
வெம்பி வருந்தாதே .....
என் தம்பி தங்கைகளே !!
உன் இரு கையை
தமிழுக்காக தூக்கு..
இல்லாவிடில் மாறிவிடும்
இலக்கு.....
அரசியல் சூழ்ச்சிகளுக்கு
உணர்ச்சியை உணவிடாதே...
விதியை மீறி விடுமுறையை
கொண்டாடுவோம் தமிழ் தேசியத்தில்...
அதுவரை அறிவாயுதம் கொண்டு போராடுவோம்..

திங்கள், 23 ஏப்ரல், 2012

மழையே...

கார்முகில் திரண்டு
ஆகாயத்தில் அருவி
உதிரி பூக்களாய் உதிர்ந்து
மண்ணில் குளிர் செய்யும் மழையே...
சாரலாய் சந்தோசம் !!
பெருந்தூரலாய் பேரின்பம் !!
குறுமழையாய் குறும்பு செய்து....
அடைமழையாய் பணி மறித்து....
காற்றை  துணை கொண்டு...
புயலை கை கொண்டு
அதீத அச்சம் விளைவிக்கும் மழையே...
அன்பாக அரவணைத்து
அனைத்தையும் அள்ளி செல்லும்
உன்னை கண்டவுடன்
உவகை கொள்ளுதே உழவர் மனம்....
உதறல் கொள்ளுதே உச்சிதன்னில்...
மழையே..
பருவத்தில் பதறாமல் வந்து செல்
தரிசெல்லாம் தழைக்கும்......

சனி, 21 ஏப்ரல், 2012

இரட்டை கிளவி


செய்வதறியா நின்ற பொழுதெல்லாம்
துணை நின்றீர்களே !!
துவண்ட போதெல்லாம்
தூக்கி சென்றீர்களே !!
அஞ்சி வெம்பிய காலத்தில்
அச்சம் போக்கி அரவணைத்து கொண்டீர்களே !!
நீவிர் இருவரும் இரட்டை பிறவிகளா !!
இலக்கணத்தில் இரட்டை கிளவிகளா !!
நீவிருவரும் என்னை நீங்கி சென்றால்
நான் உயிரற்று போவேனே !!
ஒருவர் இல்லாவிடிலும்
பொருளற்று போவேனே !!
நீவிர் இணைந்தால் இடர்கள் களையும்...
பக்கமிருந்தால் தோல்வி எமை தழுவாது...
வெற்றி என்றும் நீங்காது.....
இணைந்தே எனை ஆளும்
"தன்னம்பிக்கை" "துணிச்சல்"
நீங்கள் உள்ளவரை எமை எவரும்
அசைத்திட இயலாது...

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண்ணினம்...


உறவுகளை உற்பத்தி செய்து
உலகை கண்ணிமையில் கொண்டு
வாழும் பெண்ணினமே !!
உன்னை வாழ்த்துரைக்க
சொல் தேடி
விழி மூடி
வழி தேடி
ஆழ்மனதை அலைக்கழித்து
உள்மனதில் உருவெடுத்தது
உன்னை பற்றி...

ஆவதற்கும் முடிவதற்கும்
முற்றிலும் நீயே உருவம்...
உருவத்தில் மென்மையாகி
வடிவத்தில் தன்மையாகி..
குணத்தில் பெண்மையாகி..
வரைமுறைகளுக்குள் முடிவாகி .....
தன்னுள் அனைத்தையும் அடக்கிய
பெண்ணினமே உனை போற்றுகிறேன்......

பேதையாய் உவகை தந்து

பெதும்பையாய் பெருமையடைந்து
மங்கையென மாற்றம் கொண்டு
மடந்தையில் உலகை கற்று
அரிவையில் அகிலம் போற்ற
தெரிவையில் குலம் செழிக்க
என்றென்றும் பேரிளம்பெண்ணாய்
எம்மில் நிலைத்து வாழும் பெண்ணினமே !!
உன்னை வணங்குகிறேன்.....

போற்றுவதால் புரிந்துக்கொள்

வணங்குவதால் உன்நிலையில் மாற்றம்கொள்....
மறவாது நினைவுக்கொள் உன் பெருமை
யை.......

திங்கள், 16 ஏப்ரல், 2012

விதைகள் எழாமல் போகாது.....



உன் மொத்த அச்சத்தையும் அள்ளிக்கட்டு...
அடங்கா நரம்புகளை முறுக்கி கட்டு..
தமிழனாய் நிமிர்ந்து நெஞ்சை தட்டு..
வீரத்தில் உனக்கு இல்லை நிகரென
எதிர்ப்பவனை வெளுத்து கட்டு...
இந்தியன் என்ற சொல்லை விட
தமிழன் நான் என்று உலகமெங்கும் பறை சாற்று..
வீழ்ந்தது விருட்சமல்ல விதைகள்
விதைகள் எழாமல் போகாது.....
விண்ணை உடைக்காமல் நிற்காது......
தலைவன் பதித்த தடம் அழிந்து போகாது.....
தர்மம் மீண்டும் வெல்லும் பொய்யாகாது...
தமிழனுக்கென்று நாடொன்று உருவாகும்...
அதுவே எம் கொள்கையின் கருவாகும்.....

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழ் தேசிய வாழ்த்துக்கள்...

வந்தாரை வாழ வைத்து வலுவிழந்த போதிலும்...
விட்டு கொடுத்து வீணாக போன பொழுதிலும்...
இல்லை இதற்கு "நிகரென" தனித்து வாழ்ந்து
எங்கும் பளபளக்கும் ஒளியோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும்..
என் தாய் தமிழ் மொழியே !!!!.


இணைந்து வாழும் எம்மினமே..!!!!!!
சித்திரையில் தொடங்கினாயோ !!


தையினிலே தொடங்கினாயோ !!
உன் தொடக்கத்தை .....
அதுவல்ல சங்கதி...எத்திக்கு சென்றாலும் நீயே எம் கதி.....
உன்னிலே உள்ளது எங்கள் மூச்சு !!
உன் தொடக்கத்தில் செம்மையாகும் எம் வாழ்வு..
அண்டம் அதிர உரைத்திடுவோம்
எம்மினமே உயிரென்று...
தமிழ் பேசும் எந்நாட்டவர்க்கும் எனது தமிழ் தேசிய வாழ்த்துக்கள்....


.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

திசை மாறும் தேசப்பற்று...


உதிரம் ஒழுக
உயிர் கொடுத்து
உயிர்பித்த தேசப்பற்று....
இன்று
மண்டியிட்டு போனது
மட்டையாட்டத்தில் !
உயிரை பணையம்
வைத்து மானம் காத்த
வீரன் எங்கே....!
பணையம் வைத்து
மானத்தை வாங்கிய
வீரன் எங்கே ...!
அயல்நாட்டு மொழியில்
அண்டிபோன பற்று !!
சுண்டிய ரத்தத்தில்
சுருண்டு போனது...
அன்னை மொழியில் பிள்ளை
பேசினால் இழுக்கென்று என்னும்
மூடா!!
உணர்வாயா வாடகை தாயின்..
தரமென்ன !!
கூத்தாடி கையில் காத்தாடி போல
தேசம் காற்றில் பறப்பதென்ன.....
இன்னும் கூற நினைவில் பல
இருந்தாலும் மனம் பதைப்பதென்ன...

சனி, 7 ஏப்ரல், 2012

தனிமை

ஊமையின் குரல் உரக்கும்...
உளவியல் உண்மைகள்
உயிர் பெற்று உலவும்..
மனசாட்சியின் மறுபக்கத்தை
புரட்டி புன்னகைக்கும்..
இனிமையான நினைவு
நிலாவில் ஒளிவீச
நடவாத கற்பனைகள் அரங்கேறும்.....
சிந்தனைகள் நெருக்கடியில்
சிக்கி சிதறும்,,,
சுயத்தை உணர்விக்க
சிரத்தின் உச்சியில்
சிம்மமாய் கர்சிக்கும்....
சிந்தாந்தங்கள் சில நிமிடங்களில்
சிறுநூலாய்  சுருண்டு போகும்..
காரிகையாள் தந்த இன்பமும் துன்பமும்
மாறுதலாய் சிந்தையை சிலிர்க்கும்..
ஏந்தி கொண்ட முகமுடிகள்
அகன்று அசலை அறிவிக்கும்...
ஞானிகளையும் மகான்களையும்
தோற்றுவித்து மகிழும்..
தனிமை
இனிமையும்  வெறுமையும்
ஒரு சேர உருவாகும்....

வியாழன், 5 ஏப்ரல், 2012

நான்தான்........

விடையளித்து வினா கேட்பேன்,,
வீழ்ந்த பின்னே கை கொடுப்பேன்...
தோல்வியளித்து துவள வைப்பேன்...
பின் வெற்றியளித்து வியக்க வைப்பேன்..
விபரீதத்தின் விளிம்பை எட்ட வைப்பேன்...
எட்டிய பின் ஏணி கொண்டு இறக்கி வைப்பேன்..
என்னை சந்திக்காமல் சென்றால் சரிவு ..
சந்தித்து சென்றால் என்றும் உயர்வு...
என்னை யார் என்று கேட்டால் பலவீனம்....
யார் என்று உணர்ந்தால் மூலதனம்...
சந்தித்தோர் சட்டென்று சொல்வர்
நான்தான் "அனுபவம்" என்று....

உயிரற்ற உணர்வுகள்...


உடல் உயிருக்கு மட்டுமல்ல..
உணர்வுக்கும் சொந்தமானது.
உயிரற்ற நிலையில் உணர்வுகள்....!!
உடலோடு உயிர் உறவாடி பயனென்ன...
உணர்வை சுகிர்த்து ருசித்து வாழாமல்,,,
உடலை மதித்து ரசித்து போற்றுவதேன்........

புதன், 4 ஏப்ரல், 2012

நான்..

நான்..
இது அகந்தையில்
உரைத்த சொல் அல்ல..
என்னிலை விளக்க
அறியாமையில் உரைத்தது...
தமிழன் என்று தலை
நிமிர்ந்திட ..எம்மினம் என்று
மார் தட்டிட ..
உணர்ச்சியின் உச்சத்தில்
உருக்குலைந்தவன்..
பற்றாளன் என்ற போர்வையில்
பாசாங்கு செய்யும் எண்ணமில்லை,,,
அகிலம் அறிய பிறர் குறை
சுட்டிக் காட்ட விருப்பமில்லை...
தன்னில் மாற்றம் கொண்டே
மாற்றத்திற்கான வழி தெரிந்தவன்,,,,
தலை தூக்கி நின்றவனை எல்லாம்
தலைவன் என்று ஏற்க மனமில்லாதவன்.....
ஒருவனே தேவன் ஒருவனே தலைவன்
என்ற நேர் கொள்கை உடையவன்...
பேச்சில் மட்டும் வீரம் காட்ட
துணிவில்லாதவன்...
நூறோடு சேர்த்த நூற்றிஒன்றாய்
வாழ விருப்பமில்லை...
தனிசிந்தனை உள்ளவன் என்று தனித்து
வாழ விரும்பவில்லை...
தனிப்புரட்சி செய்யும் எண்ணமில்லை...
ஊருக்கு ஊரு செய்யும் எதுவும்
புரட்சியில் சேராது என அறிந்தவன்....
எத்தனை துன்பமிருந்தாலும்
எம் இனத்திற்காக தூக்கிய கரத்தை
நிலை மாற்ற திட்டமில்லை.......