என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 30 ஜனவரி, 2012

புளித்தகனி

அறிஞர் முதல் அன்னாங்கயிறு அவிழ்ந்த ஆண்டி வரை 
தனக்கென்று ஒரு முன்கதையை வைத்துள்ளனர்.....
இன்றைய தோல்விக்கு நேற்றைய வரலாறை
 புரட்டுவதே இவர்களின் தொழில்....
நாளை என்ற நற்கனியை எட்டி பறிக்க
முயலாமல் நேற்றைய புளித்தகனியை 
சுவைத்து என்ன பயன்......

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

வண்ண தமிழன் !!!

வெண்சட்டை மேல்கொண்ட கதர் அணிந்தவன்..
செஞ்சட்டை அணிந்த  தோழமை கொண்டவன்..
கருஞ்சட்டை அணிந்த  தன்மான தமிழன்..
இருவண்ணம் கொண்டு  உடன்பிறந்தவன்..
வண்ணங்களிடையே வெண்மை கொண்டவன் ரத்தமானவன்..
பச்சை,மஞ்சள்,காவி,இன்னும் எத்தனையோ ..
நிறங்களில் வண்ணமாகி தன் அடையாளம் 
தன்னை தொலைத்து தேடுவதே ..
பிழைப்பாய் கொண்டவனே !!!
நிறத்தில் இல்லையடா உணர்ச்சி...
திறத்தில் செய்யடா கிளர்ச்சி...
இழந்த இனம் வருமே மறுசுழற்சி..
வண்ணத்தை கலைத்தால் மறுமலர்ச்சி..
பல் வண்ணமாய் இருக்கும் தமிழா !!!
நல் திண்ணமாய் இருப்பது உயர்வு..

சனி, 28 ஜனவரி, 2012

தணல் தமிழா !! முத்து குமரா !!


தணல் தமிழா !! முத்து குமரா !!
நாங்கள் இழந்த வீரத்திற்கு 
வித்தாகி போனாயே..
உன்னை இழந்து இழந்த 
உரிமையை மீட்டெடுக்க மரித்தவனே...
உயிரை கொடுத்து உணர்வை 
மீட்டி மீள செய்தவனே !!!!
குன்றில்  நின்ற விளக்காய் எரிந்து சென்றாயே..
உன் தியாகத்தால் திடுக்கிட செய்தவனே.. 
உனக்கு பல ஆயிரம் கைகள் கூடி 
வணக்கங்கள் வீரமாக கூப்பினாலும்
எங்கள் கரம் தன்னில் கறைகள்
ஆயிரம் உண்டு...
உன் இழப்புக்கு ஈடு செய்ய
ஈடாக உன்னை தொடர இழப்புகள் பல..
இத்துணை  மரணத்திற்கும்  மறுபதில் மறுப்பை 
தவிர மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை..
இனி மரணித்து அல்ல !!! மரணம் விளைவித்தே 
உணர்ப்பிக்க முடியும்,,
ஏனெனில்  இது வரை இழப்பு எம்மில் மட்டுமே.....
தை திங்கள் பதினைந்து..போனது உன்னுயிர் மட்டுமல்ல !!!

திங்கள், 23 ஜனவரி, 2012

..கனவுகள்..


உலர்ந்து போன ஆசைகள் 
அண்டி அரசாலும் ..
நிற்கதியில்லாமல் போன
நிம்மதிகளின் இருப்பிடம்...
மாற்றுமொரு வாழ்க்கையின் 
நித்திரை தேசம்..
இது
ஆண்டியை கூட 
அரசனாக்கும்..
ஆழ்மனதின் அதிசய 
கூடாரம்..
பொய்த்து போகும் 
உண்மையின் உறைவிடம்..
கரைந்து போகும்
கற்பனைகள் உலா வரும்..
வேட்கை கொண்ட மனிதரிடம்
வேடிக்கை காட்டும்..
பதிலை கொடுத்து வினாவை 
விளைவிக்கும்..
துக்கம் கொண்டவருக்கு 
தூரிகை கொண்டு தாலாட்டும்..
தூக்கம் கொண்டவருக்கு
காரிகை கொண்டு கலைக்கும்..
அளப்பரிய ஆனந்தத்தை தரும்..
துணிச்சல் காரனையும் 
திடுக்கிட வைக்கும்..
"வரமோ" "சாபமோ" கனவுகள் என்றும்
 நமை சூழ்ந்து கொள்ளும்,,,

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சுபாசு சந்திர போசு



சுபாசு சந்திர போசு 
ஐயா உன் பெயரை சொன்னால் 
எனக்கல்ல எம் வீட்டு பூனைக்கு கூட 
புல்லரித்து போகுதய்யா !!
துணிச்சல் கூட உன்னிடம் பிச்சை கேட்குமே..
வீரம் கூட வியர்த்து போகுமைய்யா ..
மரணம்  கூட உன்னிடம் மரணித்து போனதே..
மண்ணில் இறப்பதற்கே பிறப்பவனிருக்க
நீ பிறந்து இறவா வீரம் எமக்கு அளித்தாயே !!
ஒரிசாவில் பிறந்த ஒளிசுடரே ..
வங்கத்தில் சீற்றம் கொண்ட வேங்கையே !!
ஒட்டுதுளி குருதி சொட்டும் வரை..
உறுதி கொண்ட கட்டுகடங்கா வீரனே !!
உன்னை கொடுத்து எம்மை காத்த
லட்சிய பூமியே !!
அடிமை இந்தியனை அடங்கா இந்தினாய் 
மாற்றிய மகத்துவம் உன்னையே சேரும்..
நீ பற்ற வைத்த நெருப்பில் 
குளிர் காய்ந்து பெற்றோம் சுதந்திரம்..
அது நீயில்லாமல் போகவே இல்லையே நிரந்தரம்..
உன்னை தொடர்ந்தவரெல்லாம் 
மண்ணில் புதைந்து போக..
மறந்தவேரெல்லாம் மணிமுடி தாங்க ..
மதிகெட்டு மண்ணாகி போனதே உனது லட்சியம்...
""ஆகவே மீண்டும் உன் பிறப்பு அவசியம்...""
நின் பிறப்பு வீரத்தை விதைத்து விளைத்தது..
விளைந்த பயிரில் சில வீணாகி போனாலும்
பல வீரியம் கொண்டு விதைகளை தாங்கி நிற்கிறது..
அறுவடை தொடங்க நாட்கள் தூரமில்லை..
அந்நிலையில் மீண்டும் நீ உதித்தால் வெற்றி எம் கையில்..
வீரத்தை விளைத்த தலைவணங்கா 
தலைவனுக்கு 
தலைவணங்குகிறேன் ...

சனி, 21 ஜனவரி, 2012

நட்பு நிலவரம்

வீழும் போது தாங்கும் நட்பு...
எழும் போது வீம்பாய் நிற்பதேன்...

நட்பூக்கள் கூடி களித்த தருணம்...சிறு
காற்றில் இதழ் இதழாய் உதிர்வதேன்...

முகம் தெரியாத போது முறுவலித்த நட்பு...
அகம் அடைந்த பின்பும் முகம் முறிப்பதேன்,,,

விழிகள் மூடி நின்ற போது வழி காட்டிய நட்பு..
இருவிழி திறக்க முயலும் போது முறியடிப்பதேன்..

எத்தனை இடர்கள் வந்தாலும் நீங்காது என் நட்பு,,,
இதை தக்கவர் புரிந்தால் இறங்காது அதன் மதிப்பு.........

தலைமுறை


இத்தலைப்பை யோசித்தேன் பலமுறை..
புரிபட வில்லை இதனின் வழிமுறை .

இத்தலைமுறையில் நாம் செய்ததென்ன சாதனை..
சற்றே நினைந்தால் மிஞ்சுமே மன வேதனை..

வழிவரும் தலைமுறைக்கு செய்யாத சாதகம்.
தலைமுறைகள் கடந்த பின்னே விளையும் பாதகம்.

சித்தாதி சித்தனும் அக்காலத்தே பாடி வைத்தான்..
அதை இக்காலத்து பித்தனும் மூடி வைத்தான்..

ஆதி தமிழன் சொல்லி வைத்தான் சூசகம்..
தொலைத்ததால் கரம் நீட்டி கேட்கும் யாசகம்..

நாற்பத்தியேழு வரை சுதந்திரம் மட்டுமே இலக்கு..
அது கிட்டியதுடன் மந்தி கை மாலை போல் வழக்கு.

தெள்ளிய சிந்தனை இல்லா பெரும் தலைகள்..
அதனால்  முளைத்ததே தடையாக வெறும் களைகள்.

இந்திய தாயின் தலை முதல் பாதம் வரை அவலம்..
பாதம் தன்னில் ஊரு செய்தால் பாரதமே கவிழும்..

" இனியொரு விதி செய்வோம் " பாரதி சொன்ன படி..
இனியாவது விழித்து வழி செய்வோம் நல்ல படி.

தலைமுறை செழித்து வாழ வழியமைப்போம்..
சிக்கல்களையும் ,சட்டங்களையும் சீரமைப்போம்....

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

அறியாமை...

என்னை விட்டு என்னை விடுவிக்க முயற்சிக்கிறேன்..

அது முடியாத பொழுதும் என்னை நானே பயிற்சிக்கிறேன்...

ஊணுக்கும் உயிருக்கும் உறவில்லை என்பதை உணர்கிறேன்..

உப்பில்லாத உறவுகளுக்கு உணர்ச்சியற்று உருகுகிறேன்..

முடிவில்லாத பயணத்தில் முதல் நிலையில் பயணிக்கிறேன்..

அவிழா முடிச்சுகளோடு மரணத்தை நோக்கி நகர்கிறேன்..

வாழ்வுதான் முடிவா ! முடிவுதான் வாழ்வா ! அறியாமலே தவிக்கிறேன்...

உணர்வு கொண்டால் மார் தட்டுங்கள்..

கொல்லைதன்னில் கொத்தாய் கொலை விழ..
திண்ணைதன்னில் முத்தாய் முறுவலித்தாய்..
திண்ணைதன்னிலும் திடீரென தீ பிடிக்க..
உள் முற்றம்தன்னில் குடி புகுந்தாய்...
இனி முற்றத்திலும் இடி விழும்..
எங்கு செல்வாய் தமிழா....................

மேற்கூறியது புரியாவிட்டால் புரியும் -
தமிழக வரைபடம் கண்டால் தெரியும்..

செல்லும் தடமெல்லாம் தடைகள்..
இருக்கும் இடமெல்லாம் இடர்கள்..
புகையூந்து கூட புறம் தள்ளி செல்கிறது..
தண்ணீர் மட்டுமல்ல கண்ணீர் கூட வற்றி போகும்...
நாளைய இளந்தமிழன் சிந்த கூடும் செந்நீர்..
தமிழன் வரல்+ஆறு கூட வற்றி போகும்..
இனமொன்று இருந்தது கூட இல்லாமல் சாகும்..
இது நடவாமல் இருக்க கூடுவோமே இனமான சாதி..
சமர் செய்து ஒழிப்போமே எதிரிகளை பாதி..
கதர் 'கை' காரனை  மிதித்தால் போய் விடுமே மீதி..
வந்தாரையும் வாழ வைப்போம்..
வழி மறிப்போரை வலுவிழக்க செய்வோம் - அதர்க்கு
முன்னதாய் தேவை இன ஒற்றுமை..
களையெடுப்போம் உள்ளுள்ள வேற்றுமை..
உணர்வு கொண்டால் மார் தட்டுங்கள்..
என்  இனமென்று தலை நிமிருங்கள்...

சனி, 7 ஜனவரி, 2012

நாளை நம் கையில்..

நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..

சரித்திரம் படைத்திட நடையை தொடங்கு..

தரித்திரம் உடைத்து நாணயம் காத்து பழகு..

நான் என்ற சொல் தவிர்த்து நாம் என்று முழங்கு..

நாவை அடக்கி நறுக்கென்று பேசி அரணாய் விளங்கு..


நட்பில் நல்லதை சேர்த்து தீயதை விட்டு விலகு...

சந்ததி  நலம் வாழ
நல்லதோர்  நாட்டை உருவாக்கு...

பல மொழி பேசு நல்லதோர் தமிழை என்றும்  நல்கு...

எங்கும் பறந்து விரிந்து நம்மின புகழை பரப்பு...

என்றும் எங்கும் நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..

புதன், 4 ஜனவரி, 2012

உடையுமா !!!

தண்ணீரை காக்க கட்டிய அணை-இன்று
அதை உடைத்தால் வரும்  விணை...

காடு கழனிகளை விற்று கட்டினான் பென்னி - இன்று
கேரள அரையர்கள் நமக்கு காட்டுகிறான் தண்ணி..

ஆடி அசைந்தாடி வரும் கேரள யானை பிந்தி-அதன் முன்
பாயும் வேங்கைகளாய் அணையை காப்போம் முந்தி....


அணையை உடைக்க நீட்டினாய் கரம் - தொடர்ந்தால்
தமிழன் கொய்வான் உன்னுடைய சிரம்....

அணை உடைந்தால் பாரதம் உடைவது உறுதி - அதற்கு 
சிந்துவோமே கடைசி துளி வரை தமிழனின் குருதி...

அணை பெயர் சொல்லி விரிக்காதே அரசியல் கடை - அதில்
தகர்ந்து போகும் நீ ஏற்படுத்தும் மத்திய தடை...

எங்கும் பறந்து விரிந்தது தமிழ் இனம் - பிரிவுகளும்
முறிவுகளும் கடந்து பரவி வீசுமே எம் இன மணம்...

இனி கையை ஏந்த மாட்டோம் தண்ணீருக்காக யாசகம்-நீ 
புரிந்து கொள் இதுவே  எம்மினம்  கூறும் கடைசி வாசகம்...

திங்கள், 2 ஜனவரி, 2012

உருவாகும் புது நாடு

ஆங்கில புத்தாண்டு கொண்டாடி தன்னை மறந்த தமிழர்களுக்கு,
இந்த தன்னிகரில்லா தமிழனின் தலை நிமிர்ந்த வணக்கங்கள்.........

தமிழ் புத்தாண்டை தழைகீழாய் மாற்றி சந்தோச பட்டீர்..
ஆங்கிலத்தில் அண்டிட அன்னை தமிழை கொன்று விட்டீர்...
கடந்த ஆண்டு நம்மை காரி உமிழ்ந்து விட்டது..
இந்த ஆண்டு என்ன வாழ்த்தவா போகிறது !!!!
தமிழனை தமிழனே தமிழனாய் பார்க்கும் வரை--இந்த ஆண்டல்ல 
எந்த ஆண்டும் இழி ஆண்டே ....அது வரை நமக்கு பழி ஆண்டே !!!

அடுத்த வீடு எரியும் போது அமைதி காத்த நீ ......
தன் வீடும் எரியும் என்பதை அறிய மறந்தாய்...
அது எரியும் போது அழுது புரண்டாய் ..
அன்னை தமிழ் அடுத்தவரை 
வெறுத்தவள் இல்லை - அஃதே  
அவளை அழிக்கும் பொழுது அதை பொருப்பவளும் இல்லை .....

வீராணம் வரும் என்று வீறு கொண்டு 
வெறுத்தே போய் விட்டோம்..
காவிரி தாயோ எம் மண்ணின் தாகம் தீர்க்க 
தவியாய் தவிக்க விடடாள்..

முல்லை பெரியாரோ முடங்கி விடும் போலிருக்கு ..
தடை கல்லையும் படி கல்லாக்கும் தமிழனுக்கு ..
எல்லா பக்கமிருந்தும் இடி கல் இறங்கினால் ,,,
எப்படி கொண்டாடுவான் புத்தாண்டு...

இத்தனைக்கும் தேவை புது விடிவு ..
அதற்கெடுக்க வேண்டும் புது முடிவு..
மத்தியமே மாநிலம் காக்க கையை கொடு - இல்லை
எங்கள் பிடியை விட்டு விடு ...
ஏ....
இந்திய தாயே 
எங்கள் தமிழகத்தை உன்னிலிருந்து தனித்து விடு..
எங்கள் ஈழத்தை எங்களோடு இணைத்து விடு..
உலகெல்லாம் பரவிய தமிழன் எல்லாம் ஒன்று சேர ,,,,
உருவாகும் புது நாடு ..
அன்றுதான் அது தமிழ்(தமிழர்) நாடு.....
அப்போது கொண்டாடுவான் தமிழன் புத்தாண்டு - அதுவும் 
நம் மங்கா தமிழ் புத்தாண்டு........

இவண்-
தமிழனை தமிழனாய் பார்க்கும் தன்னிகரில்லா தமிழன்..