என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

விந்தை மனிதா....


முப்படை கண்டு எப்படையையும் 
எதிர் கொண்ட எம் தலைவா
வித்தகங்கள் செய்த விந்தை மனிதா !!

வீழ்த்தி விட்டதாய் எக்காலம் செய்வார்கள்....
வீழ்ந்து போனதாய் பரிகாசம் கொள்வார்கள்...
புலிகளை காட்டில் நரிகள் நர்த்தனமாடும் நேரம் இது....

எச்சில் சோறு தின்று 
பிச்சை கொண்டு வாழ்வதை விட ....
மரணிக்கும் மகத்துவத்தை உணர்த்திய மானிடா ....
எம்மினம் உள்ளவரை நீ இருப்பாய் ...

எம்மை போல சாமானியனுக்கும் 
சத்தம் இல்லாமல் பித்தம் போக்கிவன் நீ...
உனை கண்டே கண் விழித்தேன்...
உனை கண்டே புத்துயிர்  கொண்டேன்...
உன்னாலேயே புத்துணர்வு கண்டேன்....

நீ இல்லாமல் போயிருந்தால் 
இன உணர்வு மட்டுமல்ல...
சுய உணர்வும் மீளாமல் சென்றிருக்கும்...

எம் உணர்ச்சிக்கு உணவு ஊட்டிய 
பச்சை தமிழனே !!
இன்றில்லாவிடிலும் என்றாவது 
உன் இலக்கு கிழக்கில் விடியும்......அச்சமயம் 
சமுத்திரத்தில் சரித்திரம் நிகழும்....



திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நானா தமிழன் ?



அள்ளிவிட்ட  கட்டுக் கதையில் மயங்கி 
அடங்கா வீரத்தை அறிமையாமையில் முடக்கி,,,
சமீபமாக சரித்திரத்தை மறந்து போன நானா தமிழன் ?
ஏற்றதொரு கருத்தை எடுத்து வந்தால் 
மதத்தால் மறுப்பேன்...
கற்ற கையலவை சாதி கொண்டு சாதிப்பேன்,,,
நான்தான் திராவிடன்
நான்தான் இந்தியன் 
நான்தான் இந்து 
நான்தான் கிறிசுத்துவன்
நான்தான் இசுலாமியன் 
பல வண்ணகொடியில் நான் உள்ளேன்..
பல தலைவர்களின் தொண்டனாய்
கூத்தாடிகளுக்கு ரசிகனாய்...
இலவசத்திற்கு ஏங்கி நிற்கும் பிண்டமாய்..
நிச்சயமாக நிகழ போகும் 
மரணத்திற்கு அஞ்சி நிற்கும் 
என்னில் எங்கே உள்ளான் தமிழன்...
எம்மினத்தின் அடையாளம் எங்கே என்னில்...
செதுக்கி வைத்த சிற்பத்தில் 
மட்டுமே உள்ளான் தமிழன்.. 
நவீன தமிழன் நான்...
எம்மொழியின் 
ஆணிவேரை அடிவரை அசைத்தெடுப்பேன்....
இனி உணர்வாளர்களின் 
உணர்வை இறக்க செய்வேன்....
எம்பிள்ளைகளை அந்நிய மொழியில் 
கலக்க செய்வேன்,,,,
நாளை 
தமிழ் இனமொன்று இருந்ததை 
மாற்று மொழியில் அறிய செய்வேன்,,,,,
இதுவே எனது பிரதானம்....
(ஆதங்கத்தில் நான்.... நானும் எம்மினமும் வேறல்ல )

சனி, 18 ஆகஸ்ட், 2012

சிகரம்....



தடைப் பட்ட நீரும் 
உடைப் பட்ட போதில் 
உருவாகும் 
மின்சாரம்..
அது போலத்தான் நீயும் தோழா..
உணர்ந்தால் சிகரம் உன் வசம்...
சிகரத்தை சிரம் உயர்த்தி கண்டால்...
வென்று விடுவாய் உயரத்தை...
வான் நோக்கி செல்லும் உனது பாதம்...
நிதர்சனமாக ஆகாது சேதம்...
உனக்கே  உரித்தான செருக்கில் 
அளந்து விடு சிகரத்தின் சுற்றளவை...
ஆட்கொள்வாய் அகிலத்தின் பரப்பளவை....
ஒட்டுத் துளி குருதி சொட்டும் வரை தளராதே...
குருதி தீர்ந்து போயினும் உறுதி குறையாதே....
வள்ளுவன் வாக்கு பொய்த்து போகாது...
என்றைக்கும் வீழ்ந்து போகாது 
"தன்னம்பிக்கை".

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திர தினம்.....


சுதந்திர தினம்.....
ஒருங்கிணைந்த இந்தியாவை அமைத்து 
வெளியேறிய வெள்ளையனுக்கு நன்றி...
வேற்றுமையில் ஒற்றுமை காண முயன்ற 
எம் தலைவர்களுக்கு நன்றி....

இனி கூற எதுவுமில்லை என்பதே முன்னுரை...
உரைத்து சொல்லுமே அவலங்களை என்னுரை...
சுதந்திரத்தின் சூத்திரம் அறியாமல் 
வேற்றுமையில் ஒற்றுமை காணாமல் 
திக்கெங்கும் கோலாகலம்...
இந்தியன் என்று மதிமயங்கி 
உணர்வை உலையிலிடும் உற்சாகமான தினம் இது...
இன்றோடு முடிந்து போவதா !!
தேசப் பற்று...
எம்மினத்தின் சுதந்திரமே எமது பற்று...
ஆற்றுநீர் முதல் அரசாணை வரை வஞ்சம்...
இதை எவ்வாறு கொண்டாடும் எம் நெஞ்சம்,,,
ஈழம் முதல் மீனவன் வரை இல்லை உத்தரவாதம்..
எப்படி முளைக்காமல் போகும் பயங்கரவாதம்...
எம்மினத்தின் வீழ்ச்சியில் இத்தேசத்தின் எழுச்சியா !!
ஆயினும் உரைக்க உண்டு ஆயிரம் சங்கதி....
உணர்வுள்ள தமிழனுக்கு எம் தமிழ்த்தாயே கதி....
மறவாமல் சுதந்திரத்திற்கு 
விலையாக உயிரை வைத்த எம் தலைவர்களின்
பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன்...

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சலனம்....


விட்டெறிந்த கல்லில்
கலங்கிய
ஓடா நீர்  போல சலனம்,,,
சித்தனையும் பித்தனாக்கும்...
மதுவாய்
மாதுவாய்
உறவாய்
பிரிவாய்
சேர்வாய்
சலனம்
உற்றது போல தோன்றும்...
இல்லாதிருக்கும் வரை வரம்பில் இருக்கும் மனது...
எனினும் எதிலும் ஒட்டாமலிருக்கும்..
நிலையானது நிரந்தரமில்லை என ...
மலையான மகத்துவத்தை உணர்த்தும்...
பொய்யான உணர்வுகளுக்கு
சலனம் சட்டென்று உதவும்...
இதற்கு உட்படா  வாழ்வது அரிது..
உட்பட்டு வாழ்தல் மானிடரின் இசைவு....
மொத்த நரம்பு மண்டலமும் அடங்கி 
சலனத்தில் முடங்கி போகும்...
சலனத்தின் முடிவு சங்கடம்...