என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 29 டிசம்பர், 2012

நானும் எழுதுகிறேன்...





எழுத்துகளை கோர்த்து 
வார்த்தையை முன்னிறுத்தி 
இயன்றவரை 
இருதயத்தில் உள் நுழைந்து 
மெய்யுரைக்கும் எனது எழுத்து...
இன்னும் 
கன்னித் தமிழில் கரை சேரவில்லை..
ஆகவே 
கவிஞன் என்றுரைக்க மனமில்லை..
எனினும் 
ஆர்வத்தில் குறைவில்லை...
முடித்தது 
பள்ளிப் படிப்பை பாதியிலே..
ஆதலால் 
இலக்கணம் இல்லாமலே என் எழுத்து...
கூடியவரை 
நிகழாது எழுத்தில் கருத்துப் பிழை...
என்றும் எண்ணம் 
மொழியையே நினைந்திருக்கும்.. 
கவனம் 
இனத்தையே சார்ந்திருக்கும்...
சுற்றம் 
எடுத்துரைப்பேன் அச்சம் அகற்றி...

இன்றும் என்றும் 
எனக்குண்டான தேடலோடு நானும் எழுதுகிறேன் ...

வியாழன், 27 டிசம்பர், 2012

புத்தாண்டே...


புத்தாண்டே...
வாவென அழைக்கிறேன் உன்னை..

தமிழன் நான் என்ற பொழுதும் 
ஆங்கிலத்தான் அமைத்த 
உன்னை நம்பியே எம் பிழைப்பு...
ஆகவே 
ஆங்கிலப் புத்தாண்டே 
வேறு வழியின்றி அன்புடன் 
அழைக்கிறேன் உன்னை ...
உன்னை குறை கூற ஒன்றுமில்லை...
ஆதித்தமிழன் கண்ட எம்மோழி....
இன்று முளைத்த உனக்கா புரியும்...
எம்மீது பிழையுண்டு....
எம்மொழியும் எம்மினமும் 
வந்தாரை வாழவைத்தே பழகியது....
"முற்றத்து முல்லை மணக்காது"
என்ற மொழிக்கு நீயே சாட்சி...

இனத்தின் விநாசம்......


சுற்றம் சூழலில் 
மனிதம் குறைவே காண
காரணி கண்டிடவே 
இல்லை சமத்துவம் பேண 
இதுவே நிலைத்திட்டால் 
சாகும் நிலைக்கு வந்திடும்...
வீழும் தருணம் தந்திடும்...
அந்தோ பரிதாபம் என 
அயலான் சொல்ல கேட்டிடும்...
இனியொரு யுகம் பிறக்காது ,
காத்திருந்தால் கனி பழுக்காது,
தடியொன்றை எடுத்திடு ,
கனியாத கனியை அடித்திடு...
கை கொண்டு கேட்பின் யாசகம்,
அதுவே நம் இனத்தின் விநாசம்...... 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

எம் வாழ்வின் கூற்று....

வாழ்நிலையின் 
கடைநிலையை தொட்டுவிட 
முனைந்து விட்டேன்....
இனி நிகழ்வது 
மகத்துவமோ மரணமோ 
அனுபவித்து கொள்ள 
துணிந்து விட்டேன்...
நிகழும் நிகழ்வை 
நிகழ்த்தி விட 
உறக்கத்தை கை விடுவேன்...
இல்லையெனில் நிரந்தர 
உறக்கத்தை கைதொடுவேன்...
இதுவே எம் வாழ்வின் கூற்று....

திங்கள், 24 டிசம்பர், 2012

சந்திக்க சிந்தை கொள்ளாதீர்...


தயவுசெய்து என்னை 
விட்டுவிடுங்கள்....
என்னால் உங்களுக்கு 
ஆகப் போவது ஒன்றுமில்லை...
நான் உங்களை ஒரு பொழுதும் 
சிறப்பிக்க போவதில்லை...
ஆதலால் அச்சமே,
உணர்வில் முதன்மையான  நீ 
தயக்கமேனும்  உன் தோழனை 
அழைத்து செல் என்னைவிட்டு...
அறியாமை அகலும் 
நீவிர் நீங்கும் போது.............
எனது 
சூழ்நிலையே நீ 
உற்பத்தி செய்யும் இடர்களில் 
தன்னம்பிக்கை தவறிப் போகாது,
உன்னையும் வெளிநடப்பு செய்வேன்..
எம்
நெஞ்சில் நஞ்சாய் பதிந்த 
ஏமாற்றத்தின் அடிச் சுவடே 
அகன்று விடு என்னை விட்டு.
இனி எந்நிலையிலும்
எனை சந்திக்க சிந்தை கொள்ளாதீர்...
பொய்களும் புரட்டுகளும் எனை சூழாது 
இனி நிகழப் போவது நிதர்சனம் மட்டுமே...

சமர்ப்பணம்..

துவங்கும் எந்த செயலுக்கும் 
முடிவின் நோக்கம் சமர்ப்பணமே.....
தாயின் தளிர்வு 
பிள்ளைக்கு...
விதையின் வீழ்ச்சி 
விருட்சத்திற்கு..
நதியின் ஓட்டம் 
நற்பயிருக்கு....
எந்த முன்னுரைக்கும் 
முடிவுரை உண்டு....
அது போலத்தான் 
எச்செயலுக்கும் சமர்ப்பணம்,,,
எதிர்பார்ப்பை உள்வைத்து 
சமர்ப்பிக்கும் எச்செயலும் 
ஏமாற்றத்தை உயிர்விக்கும்....


வெள்ளி, 21 டிசம்பர், 2012

பயணம்...


குறுகிய வளைவு 
கரடுமுரடான பாதை 
நான் கடக்க வேண்டிய 
இலக்கு அதிக தொலைவு...
எட்டுவதற்குள் என் 
ஆயுள் முடியுமோ....
இடறிக் கால்கள் 
தவறுமோ...
அஞ்சிக் கைகள் 
நடுங்குமோ...
தனிமை தன்னம்பிக்கையை 
பதறச் செய்யுமோ..
அறியாத நிலையில் 
இலக்கை நோக்கியப் பயணம்...
இதில் 
இலக்கை அடைவேனோ இல்லையோ...
எனதான பயணத்தில் மாற்றம் நிகழாது....

திங்கள், 17 டிசம்பர், 2012

நிழல்



மெய்யுரைக்கும் நம்மின் போலி,,,,
ஒளி நிற்கும் 
எதிர் திசையிலே அவதரித்து 
உருவத்தை உயிர்ப்பிக்கும்....
வண்ணங்களும் வடிவங்களும் 
நிலையல்ல 
எண்ணங்களும் சுற்றங்களும் 
மெய்யல்ல 
என்பதை ஒலியில்லாமல் 
ஒலித்து விட்டு செல்லும்..
பிரகாசத்தில் மட்டுமே 
உலகம் உன்னை அறியும் 
எனும் கூற்றுக்கு நிழலே சாட்சி...
மனிதனின் நிழல் 
ஒளியின் வீழ்ச்சி..
மரத்தின் நிழல் 
உயிர்களின் எழுச்சி....

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அச்சம்..

தைரியத்தின் முதல்நிலை...
உயிர்களாய் பிறந்த 
சகலத்திற்கும் 
சொந்தமானது..
தனக்கென்று ஏதும் 
நேராதிருக்கும் 
வரை உள்ளிருக்கும்....
நிகந்த பின்னே வலுவெடுக்கும்...
வீரம் மிஞ்சும் 
நெஞ்சினிலும்...
சிறு துளியாய் நிறைந்திருக்கும்....
அச்சத்தை ஒட்டியே 
ஆலயங்களும் 
ஆராதனைகளும்....
போர்களும் 
அச்சத்தின் அதிகபட்சமே,,,
அஞ்சி நிற்கும் 
நிலையில் மட்டுமே 
மாற்றத்திற்கு 
மாறுதல் கிட்டும்....
அச்சம் இல்லாமை என்பதே 
அச்சம் 
உண்டு என்பதாலேயே,,,,
அச்சத்திற்கு எதிர் வினை வீரமன்று.....

நெருப்பு கவிஞன்


தமிழில் இன்று  சற்றே தடுமாற்றம்
வார்த்தை சேகரிப்பில் முடக்கம்
எத்தனிக்கும் எழுத்துகளில் 
அவனை நினைந்தால் நடுக்கம்....
அவன் எழுத்து வீரியத்தில் 
என் சிந்தனை  வியர்த்து போனது..
தட்டு தடுமாறி அவனை நினைக்கிறேன் 
அவனை புகழ கூட அருகதை இல்லாத தமிழனாய்...
இருப்பினும் 
தலைநிமிர்ந்து சொல்கிறேன் வாழ்த்து
செந்தீயை நெற்றி பொட்டில் வைத்து 
நாவில் கனலை கக்கிய 
எம் ஒப்பில்லா நெருப்பு கவிஞன் 
பாரதியின் பிறந்த நாள் ,,,,,

சனி, 8 டிசம்பர், 2012

தவிப்பு...


உச்சபட்ச எதிர்பார்ப்பின் 
ஒருவிதமான ஏகாந்த நிலை...
நரம்பு மண்டலங்ககளின் இடம் மாற்றம் 
தருணத்தில்  நிகழும்....
இதயத்தின் துடிப்பு  
மூளையை சலவை செய்யும்....
கண்களில் சுரக்கும் நீர் 
அடிபாதத்திலும் சுரந்து 
நடையில் பிறழ செய்யும்...
நினைவில் தங்கிய நிகழ்ந்து போனதை
நிகழப்போகும் நிகழ்வுடன் ஒப்பிட்டு
நிகழாத கற்பனையை 
தருவிக்கும் இந்த தவிப்பு........
மிகைப்பட்ட உணர்ச்சியாய்
உள்மனதின்  கிளர்ச்சியாய் 
வருகையின் வாசலாய் 
இழப்பின் இறுதியாய் 
உருவெடுக்கும்....
நடவாத ஆசையில் உருவெடுப்பதல்ல
முடிவெடுத்த ஆசை நிகழாத போது நிகழும்
தவிப்பு....
தவிக்காத உயிர்கள் உணர்வற்றவையே,,,,