என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

'நல்லோரின் கரம் வலுக்கும்'

தர்மம் தலைகவிழ்ந்து 
வீழ்ந்துத்தான் போகுமா...
அறம் செய இலார் 
துர்காரியம் செயவே 
பெரும் பேரிடர் நிகழ்த்தவே 
அதர்மம் சிரம் உயர்த்தும்
அப்பேரிடரில் வீழும் தர்மம்...
தர்மத்தின் வாழ்வுதனை 
சூது கவ்வும்;
நிலையான செயலொன்று இலவே
அதையொற்றி அதர்மத்தின் 
வாழ்வும் நிலையானது இலவே;
நற்காரியம் புரிந்திடவே 
'நல்லோரின் கரம் வலுக்கும்' 
சமயமென்று தர்மம் 
சிரம் நிமிரும் மீண்டும்;
தருமம் மீண்டும் அதனை வெல்லும்
கயவர்களின் கயமை அகலும்....   

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிந்தைக்குள் சந்தை...

எண்ணிலடங்கா 
ஒலிச் சித்திரங்கள் 
செவி மடலில்...
ஆங்காரமாய் கோட்டான்களும் 
ஆசுவாசமாய் குயில்களும் 
ஆங்கங்கே அசை மடங்குகின்றன...
விமர்சிக்கும் மூடர்களும் 
யாசிக்கும் வீணர்களும் 
நேசிக்கும் நேசர்களும் 
வியாபித்து விரைகின்றனர்...
சிந்தையோ தனிமையில் 
செயலோ வெறுமையில்...
நேசிப்பவரும் துரோகிப்பவரும் 
இனம் காண இயலாது 
ஒற்றை வரிசையில்...
வாழ்வின் திசை தெரியாது 
சிந்தைக்குள் சந்தை நிலைமை.... 

வியாழன், 19 செப்டம்பர், 2013

ஆளப் பிறந்தவன்...

எள்ளி நகையாடும்
நன்றி கெட்டோரை
சற்றே நினைக்கிறேன்
அஃதே சற்றே
நகைக்கிறேன்,
எச்சத்தை உண்டு வாழும்
நல்லோரை கண்டு
மீண்டும் நகைக்கிறேன்...
வீழ்ந்தெழுவதில் சாதனை
படைத்தவன் நான்...
ஆக்கப் பிறந்தவன் அழிவதில்லை
ஆளப் பிறந்தவன் அண்டி நிற்பதில்லை...



இதுவே எம் சாராம்சம்.....

புதன், 18 செப்டம்பர், 2013

சாரல் வீசாயோ...

சில்லென்று சாரல் வீசாயோ 
எம் தாயே - தேகம் தன்னில் 
சில்லென்று வீசாயோ -  
அணையா அக்கினி 
சிந்தைக்குள் கருக் கொண்டது 
தேகத்தை கருவாய் கொண்டது 
இனமாய் 
மொழியாய் 
உறவாய் 
உதிரமாய் 
எம்மிலே அனைத்தும் 
நிலையாய் நிலைக் கொண்டது...
சாம்பலாகும் முன் சரித்திரம் 
படைத்திட எம் தாயே 
அணைத்திட சாரலாய் வீசாயோ...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தமிழன்னையே....

உணர்வில் உருகி
உயிரில் கலந்தாயம்மா நீ
என் ஊணில் அணுவாகி
உதிரத்தில் உரைந்தாயம்மா நீ
அகிலத்தில் அடைந்திட்ட 
பொழுதும், மண்ணுக்குள் 
புதைந்திட்டப் பொழுதும் 
உன் பெயர் சொல்லியே திரிவேனம்மா...
அன்னையாய்
ஆசானாய்
உற்றத் தோழியாய் எம்மில்
நிலைத்திட்ட தமிழன்னையே
நீயே எந்தன் வாழ்வின் விளக்கம்...