என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 26 அக்டோபர், 2013

'வேலன், சோழன், ஈழன் '

சிந்திக்கும் 
போதே 
நிந்திக்கும் 
அதுதான் 
சரித்திரம்;
'அன்றோ' 
அதை 
படைத்திட 
நரம்பு 
புடைத்திட 
புசங்கள் 
துடித்திட 
வேல் கொண்டு 
நின்றவனே 
வேலன் ;
வாள் வீசி 
சென்றவனே 
சோழன் ;
துவக்கில் குறி 
வைத்தவனே 
ஈழத்து வீரன் ;
இத்துனையும் 
நீதான்...
'இன்றோ'  
கொட்டடி 
அடிமையாய் 
சோற்றுக்கு 
வாழ்வாயா !
உணர்வு 
கொள்வாயா !
சொல் நீ ....

வியாழன், 24 அக்டோபர், 2013

விலை யாதென கேட்டேன்..

விலை யாதென 
கேட்டேன் 
எப்பொருளுக்கு 
என்றுரைத்தான் 
வியாபாரி 
உள்ள பொருள் 
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை 
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை 
சரிபார்த்து உண்டென்று 
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம் 
உனக்கில்லை என்றே 
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....  

புதன், 16 அக்டோபர், 2013

தமிழ்ச்சாதி...




கைக் கொண்டு 
இரும்பை 
வளைத்திட்ட தமிழ்ச்சாதி 
நாணல் போல் 
வளைந்திடவா நியதி !
கரையான் கூட்டில் 
கருநாகம் புகுந்திட
வாழ்வறியா போனச் சாதி

போரெடுத்து  
வேலெடுத்து 
வாளெடுத்து வீசி 
கயவர் தம் 
தலைக் கொய்த தமிழ்ச்சாதி 
துப்பாக்கி முனையில் 
வீழ்ந்திட்ட போதும் 
இல்லாமல் போனதே நாதி...

சமுத்திரம் கண்டு 
சரித்திரம் படைத்து 
கொலோன்றிய தமிழ்ச்சாதி 
சமுத்திரத்தில் 
மீனுக்கிறையென 
வீழும் மீதமே !
எவ்விதம் நிகழும் 
எம்மினத்தின் மீட்சி....

பட்சிகளும்
தமிழ்ச் சாதியும் 
ஒன்றானதே ! 
இருக்க இடமொன்று 
இல்லாமல் போனதே !
என் செயும் எம் தமிழ்ச்சாதி
அறிந்தோர் ஒருவர் உரைப்பீரோ...




செவ்வாய், 8 அக்டோபர், 2013

சக்தியே;

என்னில் யாதுமாகி
நின்றவளே
எம்மில் வேதமாகி
ஒலித்தவளே
நெஞ்சில் திறமாகி
வாழ்வில் உரமாகி
என்னை வலியோனாய்
உருவெடுக்க செய்த
சக்தியே;
அன்னையே;
சிவத்தில் பாதியாய்
என்னில் மீதியாய்
இருந்திடுவாயே...


இன்றியமையாதவன்...

இன்றியமையாதவன்

எம் வாழ்வோடு ஒற்றி

ஒருங்கிணைந்தவன்

திக்கற்று தவித்தோனுக்கு

திசையறிவித்தவன்

வக்கற்று நின்றோனுக்கு

வாழ்வளித்தவன்

இவனே என்னில்

இன்றியமையாதவன்

எம்மில் அசையாமல்

வீற்றிருக்கும்

'தன்னம்பிக்கையே'அவன்,

அவனின்றி நான் அணுவும் அசைவதில்லை...