என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 31 ஜனவரி, 2013

நாடென்பார் ;


நாடென்பார் ; நீதியென்பார் 
நடுநிலையில் அமர்ந்து நான் 
நல்லவ னெனஉரைப்பார்...
உள்மனதில் வஞ்சம் வைப்பார் 
அதில் தீரா வழக்கொன்றை துவக்கி வைப்பார்...
பகுத்தறிவு பேசிடுவார் ; 
பல்லிளித்து சிரித்திடுவார் : நம்பியோரை 
நட்டாற்றில் நிறுத்திடுவார்...
தனித்து தன்னை காட்ட  
இனத்தை முன்னிருத்துவார்....
இவர்களையே தலைவரென 
எம்மக்கள் கொண்டாடிடுவர்....

கை விடேன்...


கொண்டக் காரியம் கை விடேன்...
ஆழச் சிந்தனை செய்தே 
கைக்  கொண்டேன்,,,இனி 
விட்டு விட இயலாது...
கரமிரண்டை முன்னிறுத்தி 
தன்னிலை பரிசோதனை 
செய்யும் தருணம் இதுவே...
எனை விளங்கிக் கொள்ளும் 
பொறுமை என்னிடம் இல்லை....
என்னை விளக்கிச் சொல்ல நேரமும் இல்லை...
ஏனெனில் 
வெல்லுவதும் வீழ்வதும் எம் கையில்...

தேசம் என்னடா

தேசம் என்னடா தேசம் 

தேடிப்பாரடா அதில் நேசம் 
இல்லையென்று சொல்லைத் 
தவிர இருக்காது அவனிடம்...
தொல்லை என்றுநினைத்திடுவான் 
தமிழ்ப்பிள்ளை என்றால் 
சிரித்திடுவான் எள்ளி நகைத்திடுவான்...
ஆற்றுநீரை அணைக்கட்டி தடுத்திடுவான் 
எம்மக்களை எலிக்கறி உண்ண 
வைத்திடுவான்...
வேற்றுமையில் ஒற்றுமைக்கு 
உலை வைப்பான்..சனநாயகத்தை 
சடுதியில் மறந்திடுவான்....இனி 
நிகழாது மாற்றம்...
நிகழ்ந்து விடும் ஏமாற்றம்...


மீண்டும்

காய் இழந்த இளமையில் 

பழத்தின் இனிப்பு...
வீழ்ந்த  விதையில் 
முளைத்தது விருட்சம்..
தடைப் பட்ட நீரில் 
உருவாகும் மின்சாரம்..
வெட்டிய வாழை இலையில் 
படைத்தது அறுசுவை..
உதிர்ந்த இலையில் 
மரத்தின் வசந்த காலம்..
இழந்த அத்துனையும் 
மீண்டும் சக்தி கொண்டு பெறுவதற்கே....
இரவு வணக்கங்கள் நட்புக்களுக்கு.....

புதன், 23 ஜனவரி, 2013

தாழிட்ட கதவு....


மதில் வைத்து 
தன்னில் அடைந்து  
கொண்ட இனியத் தோழா...
கருத்தொன்று சொல்லிடுவேன்
உரைக்க உரியவன் நான்...
நாளொன்று 
தவறாமல் உண்டிடுவாய் 
உளமார உழைத்திடுவாய் 
உண்மை எதுவென 
உணர்ந்திடுவாய்,,,இருப்பினும் 
உள்ளத்தை உள்வைத்து 
பூட்டெதற்கு...
உடைத்திட உன்னில் 
உறுதியுண்டு...உணர்ந்திட 
குருதியில் சுரமுண்டு...
வட்டத்தில் அடைந்திட 
அற்பன் நீயல்ல....அறிவால் 
அளப்பரிய அற்புதம் நிகழ்த்து...
அகன்று அகிலத்தை 
அரையடியில் அளந்து 
ஓரடியில் நிமிர்ந்து நில்,,,
காலுக்குள் பதுங்கியுள்ளது 
பூமி...இனி நீ யாரென்று 
காண்பி..

வெள்ளி, 18 ஜனவரி, 2013

துணிந்து விட்டேன்.....


எதிர்மறைகளைத் 
துளைத்து எதிர்வரும் .
துயர்களை  மறைத்து,
கைக் கொண்டு ஆயுதம் பற்றி 
விதியெனும் வல்லோனை 
காலனிடம் சேர்ப்பேன்....
இனிவரும் எதிர்ப்புகளை 
சட்டை செய்வதில்லை....
கிளர்ந்தெழும் உணர்வுகளை 
உயிர்பிக்க செய்வதில்லை...
இனி 
எதற்கும் துணிந்து விட்டேன்.....
நட்புக் கொண்டு 
துரோகிப்பவரையும் 
எதிர்க் கொண்டு எதிர்ப்போரையும்
இம்மியளவும் சுவாசிக்க விடுவதில்லை...
என் போலிகளை உதறி 
அசலை அறிவிக்கும் நேரம் இது....

தைத் திருநாளாம்


தைத் திருநாளாம் 
அதுவே 
மொழியின் முதல் நாளாம் ....
நம்மினத்தின் திருநாளாம் ...
இனியும் 
நம்பிக்கை கொள்கிறேன் 
எம்மினமே
விழித்தெழுவாய் என !
இனாம் தன்னில் மயங்கி 
பாசாங்கு பந்தத்தில் 
சுருங்கிப் போன எம்மினமே ...
தரித்திரத்தில் 
சரித்திரம் படைத்தது போதும்... 
போலிகள் அசலாகி
நரிகள் நாடாளுவதை காண் ...
புலிகள் புற்களை தேடுவதை காண்...
சோறுடைத்த நாடு சோறுக்கலைவதை காண் ...
காண்பதற்கரிய காணாத 
காட்சியெல்லாம்  தாயகத்திலே...
இனி நிகழாமல் 
இத்தைத் திங்களில் 
பொங்கட்டும் இன உணர்வு...
ஆதித் தமிழர் புகழ் பரவட்டும்....
இனியொரு யுகம் படைப்போம் 
அதில் தமிழே முதலென உரைப்போம்...